குறிப்பு

இந்த வலைப்பூவைப் பற்றி உங்களின் கருத்துக்கள், விமர்ச்சனங்கள், சொல் மற்றும் அர்த்தத்தில் பிழை சுட்டிக்காட்டல் ஆகியவற்றை ‘அறிவுப்பூ’ ஆர்வத்துடன் வரவேற்கிறது...

புதன், 18 ஜூன், 2014

சிந்து சமவெளியில் பிறந்த 'ஜியாமெட்ரி பாக்ஸ் ஸ்கேல்' !

இந்தியாவின் பண்டைக் காலத்து அறிவியல் கலாச்சாரம், பிற நாடுகளில் இருந்ததை விட எந்த விதத்திலும் குறைந்ததாக இல்லை என்ற உண்மை நம்முள் பலருக்கும் சென்றடையவில்லை என்று முன்பொரு கட்டுரையில் எழுதியிருந்தேன். இந்த உண்மையை அறிந்தவர்கள், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது இயற்கையே. 
எனவே, இவ்வலைப்பூவில், இந்திய விஞ்ஞான வரலாற்றைப் பற்றி  அவ்வப்போது நான் படித்ததையும், கேட்டதையும், சிறு கட்டுரைகளாக நான் எழுத முயன்றுள்ளேன். சமீபத்தில் இந்திய அறிவியல் பற்றிய  புத்தகம் ஒன்று, கல்லூரி நூலகத்தில் பார்த்தேன். அதில், இந்திய கணிதவியல் கழகத்தின் திரு. ஸ்ரீதரன் அவர்கள் பழங்காலத்து இந்தியாவில் கணிதத்தின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டு பற்றி எழுதியுள்ளார். அதிலிருந்தும், இணையத்திலிரிந்து தோண்டி எடுத்த சில செய்திகளையும் தொடர்ந்து காண்போம்...   

 உலகின் மிக பழமையான நாகரிகங்களில் ஒன்று, சிந்து வெளி நாகரிகம் என்று பள்ளிகூடத்தில் வரலாறு பாடங்களில் நீங்கள் படித்திருக்கலாம். அந்த காலகட்டத்தில் அறிவியல் முறையற்றதாக இருந்தாலும், அப்பொழுது வாழ்ந்த மக்கள் சந்தித்த தேவைகளையும், பிரச்சனைகளையும் தீர்வு செய்யும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தது. 


மோஹன்ஜதாரோ நன்றி:விக்கிபீடியா 
 
சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்களுக்கு என்ன ஆனது? என்ற கேள்விகளுக்கு இன்னும் நமக்கு பதில் கிடைக்கவில்லை. இருப்பினும், ஹரப்பா மற்றும் மோஹன்ஜதாரோ இடிபாடுகளிலிருந்து அவர்கள் நன்கு வடிவமைக்கப்பட்ட நகரப்புறங்களில் வாழ்ந்தனர் என்று தெரிய வருகிறது. நகர வடிவமைப்பின் திட்ட பணிகளுக்கு கணிதத்தின் முக்கிய அங்கமான வடிவவியல் (Geometry) அம்மக்கள் அறிந்திருக்க வேண்டும் என்று ஸ்ரீதர் அவர்கள் குறிப்பிடுகிறார். இதற்கு மேலும் ஆதாரம் அளிப்பதாக, அவர்கள் உருவாகிய மண்பாண்டங்களில், வட்டம் மற்றும் முக்கோண வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. நேரம், எடை மற்றும் நீளம் அளப்பதற்கு துல்லியமான அளவுகளையும் உபயோகித்தனர். உலகத்திலேயே மிகப் பழமையான அளவுகோலும் (Scale/Ruler) இங்கு கண்டுபிடிக்கப்பட்டது.

தொடரும்...

சனி, 14 ஜூன், 2014

கற்களில் பொறிந்த நீர், பூமிக்கடியே நீர்த்தேக்கம்

அகண்டுவிரிந்த பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளி கொள்ளும் முயற்சியில், நம் அறிவியல் ஆராய்ச்சிகள் கவனம் செலுத்தினாலும், நாம் வாழும் பூமியில் கண்டறியப்படாத மர்மங்கள் எவ்வளவோ உள்ளன என்பது மறுக்க முடியாதது. பூமியில் உயிர்கள் உருவானதற்கு இன்றியமையாத ஒன்று நீர். பிரபஞ்சத்தில் பல இடங்களில் நீர் இருப்பதற்கான அறிகுறிகள் கிடைத்திருந்தாலும், திரவ நிலையில் பூமியை தவிர்த்து வேறு எங்கும் நீர் இருப்பதற்கான ஆதாரம் இதுவரை ஏதும் இல்லை. 'நீல கிரகம்' என்று அழைக்கப்படும் பூமியின் மேற்பரப்பில், எழுபது சதவிகிதர்த்திற்கும் மேல், சராசரியாக பன்னிரண்டாயிரம் அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த அகண்ட நீர்ப்பரப்பின் உருவாக்கத்தை விளக்கும் வகையில், கடந்த வாரம் ஓர் முக்கிய கண்டுபிடிப்பின் விவரங்கள் வெளியிடப்பட்டன. அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழகம் மற்றும் நியூ மெக்சிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பூமியின் வட அமெரிக்க கண்டத்தின் அடியில் 640 கி.மீ. ஆழத்தில், மிகப்பெரிய நீர்த்தேக்கம் இருப்பதற்கான அறிகுறிகளை கண்டறிந்துள்ளனர்.  ஆனால் இது, நமக்கு பரிச்சயமான திரவ நிலையாகவோ, பணிக்கட்டியாகவோ, நீராவியாகவோ இல்லை, ஓர் தாது பொருளின் மூலக்கூறு கட்டமைப்பில் பொறிந்துள்ளது.

கடல்களிலிருந்தும், ஆறுகளிலிருந்தும் நீராவி மேலெழுந்து, மேகங்களாக உருவெடுத்து, பின்பு மழையாக பூமிக்கு மீண்டும் வந்து சேரும் நீரின் சுழற்சிமுறையை நாம் ஆண்டுதோறும் காண்கிறோம். அது போல், மேற்பரப்பின் நீர், பூமியின் டெக்டானிக் அகடுகளின் (Tectonic Plates) அசைவால், பூமிக்கடியே நடுப்பகுதியான மான்ட்டில் (Mantle) என்னும் பகுதிக்கு தள்ளப்பட்டு, அதீத வெப்பமும், அழுத்தமும் காரணமாக, நீரின் (H2O Molecule) கூறு, பிளவு பெற்று, சில வகை தாது பொருளில் பொறித்துக் கொள்கிறது. அத்தகைய தாது பொருளான ரிங்வுடைட் (Ringwoodite) என்னும் நீல நிற கல்லின் பாகம், கடந்த மார்ச் மாதம், பிரேசில் நாட்டிலுள்ள ஓர் எரிமலை அருகே தோண்டும் பொழுது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தாதுப்பொருளின் மீது தொடங்கப்பட்ட ஆராய்ச்சியில் விளைந்தது, இந்த கண்டுபிடிப்பு.  இவ்வாறு, மேற்பரப்பில் உள்ள நீரும், பூமிக்கடியே கற்களுள் பொறிந்து தென்படும் நீரும் ஓர் உலகளாவிய நீர் சுழற்சி முறையை (Whole-world Water Cycle) சேர்ந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.        

ரிங்வுடைட் தாதுப் பொருள். நன்றி :phys.org

சரி, பிரேசில் நாட்டில் கிடைத்த ஓர் கல்லை வைத்து, வட அமெரிக்க கண்டத்தின் அடியே நீர்ப்பரப்பு இருப்பதாக எவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் யூகிக்கின்றனர்? பொதுவாக 'மேக்மா' (Magma), என்னும் உருகிய கற்களால் ஆன எரிமலைக்கொழம்பு பூமியின் நடுப்பகுதியில் 80 கி.மீ. ஆழத்தில் மட்டுமே காணப்படும். 
 
புவியின் குறுக்கு வெட்டு தோற்றம். நன்றி : விக்கிபீடியா
அனால், 640 கி.மீ. அடியில், இதே எரிமலைகொழம்பு வட அமெரிக்க கண்டத்தின் அடியே இருப்பதை கண்டுபிடிக்கப்படுள்ளது. இதற்கு முதன்மை காரணம் ரிங்வுடைட் தாதுப் பொருளில் பொரிந்துள்ள நீர் என்பது என்று ஆராய்ச்சி கூடத்தில் செய்யப்பட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேல் குறிப்பிட்டுள்ள ஆழத்தில் காணப்படும் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தை ஆய்வுக்கூடத்தில் உருவாக்கி, அந்த நிலையை, ரிங்வுடைட் தாதுப் பொருள் மீது உட்படுத்தப்பட்டது. அப்போது, அதில் பொறிந்த நீர் கூறு, கல்லை உருக்கி குழம்பாக மாற்றியது தெளிவானது. ஆய்வுக்கூடத்தில் நடைப்பெற்ற அதே செயல் முறை, பூமிகடியில் நடைப்பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதால், எரிமலைக்குழம்பு கண்டறியப்பட்டது நீர்த்தேக்கம் இருப்பதற்கான சிறந்த ஓர் சான்று என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 5 ஜூன், 2014

ஐ.ஐ.டி. மெட்ராஸின் 41ஆம் முத்தமிழ் மன்ற விழா - ஒரு பார்வை.

இந்திய  தொழில் நுட்பக்கழகத்தின் நாற்பத்தி ஒன்றாவது முத்தமிழ் மன்ற விழா நேற்று ( ஜூன் 4, 2014 ), மத்திய விரிவுரை அரங்கில் நடைப்பெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, 'அம்புலி பர்வம்' கீழ் கண்ட பிள்ளைத்தமிழ் பாசுர வரிகளை பாடி இலக்கிய சுவை சேர்த்தார் மன்றத்தின் ஆலோசகர் திரு. ஜி. நாராயணன். பின்னர், இசைச் சுவைக்கு குறை இல்லாதபடி, ஐ. ஐ. டி.யில் பயிலும் கல்வியாளர்கள், பிரபல திரை பாடல்களையும், பக்தி பாடல்களையும் பாடினர். பிற மொழியினரையும் வரவேற்கும் வகையில், பிற மொழி பாடல்கள் பாடுபவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. அனால், அச்சமயத்தில் தமிழ் மன்ற நிகழ்ச்சியை காண, அரங்குக்குள் வந்தவர்க்கு, பிற மொழி பாடல் ஒலிப்பதை கேட்க கொஞ்சம் புதிராக இருந்திருக்கும் ! கலை நிகழ்ச்சிகள் முடிவுற்றபின், மன்ற விழாவை தலைமை தாங்கிய  ஐ. ஐ. டி. மெட்ராஸின் கணித பேராசிரியர் திரு. சுந்தர் அவர்களை கௌரவிக்கும் வகையில் சால்வை அணிவித்து பெருமை செயப்பட்டது.  பின்னர், தமிழ் மன்ற இதழான முத்தமிழ் முரசை இவர் வெளியிட்டதோடு, இவ்விதழில் இடம்பெற்றுள்ள சில கட்டுரைகளை, இதழின் ஆசிரியர் திரு. சுதர்சன் பத்மநாபன் எடுத்துக் காட்டினார்.


முத்தமிழ் விழாவில் மேடையில் அமர்ந்திருக்கும் திரு. கண்ணன், முனைவர் அருண் நரசிம்மன் மற்றும்  முனைவர் சுந்தர்.


தமிழ் மொழியில் படிப்பவர் மனம் கவரும் வகையிலும் புரியும் வகையிலும் அறிவியல் புத்தகங்கள் எழுதி வெளியிடுவது எளிதான செயல் அன்று. எனினும் அத்தகைய முயற்ச்சியில் இறங்கி, தமிழினி பதிப்பகம் துணையுடன், மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ளார் ஐ.ஐ.டி.யை  சேர்ந்த முனைவர் அருண் நரசிம்மன். இவர், 'நேனோ ஓர் அறிமுகம்', 'ஏலியன்கள் இருக்கிறார்களா?', 'டூக்கன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது?' என்ற சுவாரசியமான தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் எழுதியுள்ளார்.  இவரது இயற்புரையிலிருந்து, சில மேற்கோள்களை காண்போம். எழுத்தார்வம் இருந்திருந்தும், தமிழில் எழுதத் தொடங்கியது தற்செயலாகவே நடந்ததது என்றும், ஒரு முறை ஸ்ரீரங்கத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் தமிழ் படிக்கக் கஷ்டப்பட்ட நிலையை கண்டது, தமிழில் எழுத தூண்டுதலாக அமைந்தது என்றும் கூறினார். தனது இணைய தளத்தில் (http://www.ommachi.net/) பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி வரும் இவர், "இன்னும் இருபது வருடங்களில், தமிழில் ஆயிரம் கட்டுரைகள் எழுதி விட வேண்டும்:, என்று உற்சாகத்துடன் தெரிவித்தார். அறிவியல் சார்ந்த சொற்களை தமிழாக்கம் செய்வது, படிப்பவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்று கருதியதால், சில ஆங்கில வார்த்தைகள் அப்படியே தமிழில், தனது புத்தகங்களில். எழுதப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார் (எ. கா. Nano - நேனோ, Electron - எலக்ட்ரான் ). ஆனாலும், சில வார்த்தைகள் தமிழில் மொழிப்பெயர்த்த பின், அழகாக பொருள் விளக்குவதாக அமைந்ததால், அவை மொழிப்பெயர்ப்பு செயப்பட்டது என்றும் கூறினார் (எ. கா. Touch Screen - தொடு திரை, Thermocouple - வெப்பமின்னிரட்டி ).  எட்டாம் வகுப்பு வரை தமிழ் படித்தவர் கூட படிக்ககூடிய எளிய நடையில் எழுதியுள்ளதாக  குறிப்பிட்ட அவர், தனது புத்தகங்களில் இருந்து, சில பகுதிகளை பார்வையாளர்களுக்கு சுட்டிக் காட்டினார். புத்தகங்களை வெளியிட உறுதுணையாக இருந்த தமிழினி பதிபகத்தின் திரு. வசந்த குமாரை பாராட்டினார். கரகோஷத்தின் மத்தில் பேச்சு முடிவுற்ற பின்னர், அவருக்கு விழா தலைவர் பாராட்டி சிறப்பு செய்தார்.

திருக்குறளின் வாயிலாக, பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தலைமைப் பண்புகள் வளர்க்கும் நோக்கத்துடன் பயிற்சி அளித்து வரும் திரு. கண்ணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். திருக்குறளின் கருத்துகள் மொழியின் வரையறைகள் தாண்டியது என்பதை உணர்த்தும் வகையில், பல சிந்தனை தூண்டும் கதைகளுடனும், உதாரணங்களுடனும் அவர் பேசினார். இவரது இணைய தளமும் (http://www.seer7.com/), திருக்குறள் உலகெங்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைந்துள்ளது.

இனி வரும் மன்ற விழாவில், ஓர் கருத்தரங்கம் ஏற்பாடு செய்வது பற்றி பரிந்துரைகள் நடைபெற்று வருகிறது என்ற செய்தியுடன், விழா இனிதே முடிவடைந்தது.

மேல் குறிப்புட்டுள்ள தமிழ் புத்தகங்களை வாங்க விரும்புவோர், முனைவர் அருண் நரசிம்மன் அவர்களின் வலைப்பக்கத்தில்  இடம் பெற்றுள்ள விவரங்களை அணுகலாம்.              

புதன், 4 ஜூன், 2014

நம்மை துரத்த டைனோசர் ரோபோ தயாராகிறது !

இந்த வாரம், இணையதளத்தின் பார்வையை ஈர்த்துள்ள செய்தி, தெற்கு கொரியா நாட்டின், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பட்ட நிலையம் உருவாக்கிய ஓர் ரோபோ. இரண்டு கால்களில் சீறிப்பாய்ந்து ஓடக்கூடிய வேலாசிராப்டர் ( Velociraptor ) என்னும் டைனோசரை மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோ, மணிக்கு 28.5 மைல்கள் வேகத்தில் ஓடக்கூடியது.

நன்றி : மெட்ரோ
 
இப்போதைக்கு, கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் மட்டும் செயல்படுமே ஆனாலும், மனிதனை எதிர்த்து எழும் ரோபோக்களை கதைக்கருவாகக் கொண்ட பல சினிமாக்களை பார்த்த பின்பு, இந்த ரோபோவை பார்த்தால், பார்வையாளர்களுக்கு கொஞ்சம் பயமாக தான் இருக்கும் !


ரோபோவை உருவாக்கிய நிலையம் வெளியிட்ட வீடியோ:








  

வெள்ளி, 30 மே, 2014

சுய-ஓட்டி கார்களை தயாரிக்கும் முயற்சியில் கூகிள்

அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்று, இணையதள தொழில்நுட்பங்கள் உருவாக்கும்  கூகிள் ( Google ) நிறுவனம்.  இந்த வாரம், இந்நிறுவனத்தின் இணை-நிறுவனரான செர்கி பிரின் ( Sergey Brin ), சுய-ஓட்டி கார்களை தயாரிக்கும் பணிகளில் கூகிள் ஈடுபட்டுள்ளது என்று அறிவித்தார். இது வரை, டொயோடா, லெக்சஸ் போன்ற பிற உற்பத்தியாளர்களின் கார்களை மாறுபடுத்தி, ஓட்டுனர் இன்றி இயக்கி வந்தது கூகிள். சுய-ஓட்டி தொழில்நுட்பம் இன்னும் ஆராய்ச்சி நிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 இது வரை கூகிள் உபயோகித்த கார் ( நன்றி : விக்கிபீடியா )
காரின் வடிவமைப்பு பற்றிய விவரங்களையும் கூகிள் வெளியிட்டது. மின் சக்தியில் செயல்படும் இந்த கார், பாதுகாப்பு கருதி அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு இருபத்தைந்து மைல்கள் என்று வரையறுக்கப் பட்டுள்ளது.

கூகிள் தயாரிக்கும் சுய-ஓட்டி கார் ( நன்றி : பி.பி.சி. )
 மேலும், காரை கட்டுபடுத்த, ஸ்டீயரிங் வீல், கியர் பாக்ஸ் என்று எதுவும் கிடையாது - வெறும்  செல்/நில் பட்டன்கள்  மட்டுமே ! சாலை விபத்துகளை முற்றிலுமாக தவிர்க்கக் கூடிய வல்லமை படித்திருந்தாலும், சுய-ஓட்டு தொழில்நுட்பம் இன்னும் கூட்ட நெரிசல் மிக்க நகர சாலைகளில் அதன் திறன் முழுமையாக இது வரை சோதனை செய்யப் படவில்லை.

 

 

புதன், 28 மே, 2014

இந்தியாவின் அடுத்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மந்திரி

மே 26ஆம் தேதி இந்தியாவின் பதினைந்தாவது பிரதம மந்திரியாக பதவி ஏற்றார், திரு. நரேந்திர மோடி. அவரோடு, 44 மந்திரிகள் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுள், நீரிழிவு நோய் நிபுணரான டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் அடுத்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறையின் மந்திரியாக பதவியேற்றார்.


டாக்டர் ஜிதேந்திர சிங் (நன்றி: என்.டி.டி.வி)

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இவர்,  சென்னை பல்கலைகழகத்தில் மருத்துவம் பயின்றார் என்று, இவருடைய கல்வி விவரங்கள் பற்றி ஆராயும் பொழுது, நான் அறிந்த செய்தி. அலுவகத்தில் முதல் நாளே,  காஷ்மீர் பிரச்சனை பற்றி  சர்ச்சை மிக்க கருத்து தெரிவித்து தேவையற்ற விளம்பரத்தை இவர் பெற்றாலும், மிகுந்த அனுபவமும், தொழில் துறை வல்லமையும் கொண்டவராக திகழ்கிறார். இதனால், இவருடன் வேலை செய்வதற்கு, அறிவியல் துறை அதிகாரிகள் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.   

சனி, 24 மே, 2014

மருந்தை உயிரணுக்களுக்கு 'டோர்-டெலிவரி' செய்ய உதவும் நானோ இயக்கிகள்

வீட்டில் வசதியாக உட்கார்ந்த இடத்தில் இருந்து, இணையதளத்தின் வாயிலாக - உண்ணும் உணவு ஆகட்டும், உடுத்தும் உடை ஆகட்டும்   - அனைத்தையும் 'ஆர்டர்' செய்து, அவற்றை வீட்டிற்கே 'டோர்-டெலிவரி' செய்ய வைப்பதே இப்பொழுதைய சௌகர்யம். இப்போ உங்கள் கற்பனைக்கு கொஞ்சம் வேலை. உங்கள் உடம்பில், ஓர் உறுப்பில், சில உயிரணுக்கள் நோய்க்கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. அதனால் உங்கள் உடல் நிலையே பாதிக்கிறது. மருத்துவர் அளிக்கும் மருந்து மாத்திரைகளை விழுங்கும் கட்டாயம். அனால், மருந்துகள், நோய்வாய்ப்பட்ட உயிரணுக்களை சீரமைப்பதோடு நில்லாது, ஆரோக்கியமான உயிரணுக்களையும் பாதிப்பதால், சில பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இந்நிலையில், தேவையான அளவு மருந்தை மட்டும் 'ஆர்டர்' செய்து, குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட உயிரணுக்களுக்கு மட்டும் மருந்தை 'டெலிவரி' செய்வது தகுந்ததாக தெரிகிறதா ? ஆனால், இது கற்பனைக்கு மட்டும் உகந்த பகல் கனவு போல் தோன்றுகிறதா ? அறிவாற்றலைக் காட்டிலும் கற்பனை வளம் அறிவியலுக்கு முக்கியம் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது வெறும் பேச்சுக்காக மட்டும் அல்ல. இந்த கனவும் நனவாக்க படிக்கல்லாக அமைந்துள்ளது, கடந்த வாரம் அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தின் பொறியாளர்களின் உருவாக்கம்.

மின்சக்தியால் செயல்படும் இயந்திரங்களின் கருவாக விளங்குவது மின்சார இயக்கிகள் ( Electric Motors ). மனித உடம்புக்குள் புகுந்து, உயிரணுக்களுக்கு மருந்தை செலுத்துவதற்கு பயன் படுத்தப்படும் இயந்திரங்கள், உயிரணுவின் அளவில் இருக்க வேண்டும். இவற்றை நானோ ரோபோக்கள் என்று அழைக்கின்றனர். மின்சாரத்தால் இயங்கும் நானோ ரோபோக்களை செய்வதற்கு பெரும் சவாலாக இருப்பது, அவற்றை செயல்படுத்தும் மின் இயக்கிகளும் நானோ அளவில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம். அவ்வழியே, பொறியாளர்கள், உலகிலேயே சிறியதுமான, அதிக சுழற்சிகள் கொண்டதுமான, நீடித்து உழைக்கக்கூடியதான ஓர் நானோ மின் இயக்கியை உருவாக்கியுள்ளனர்.

நானோ மின் இயக்கி
 
இந்த இயக்கி ஓர் உப்பு படிமத்தை காட்டிலும் ஐநூறு மடங்கு அளவில் சிறியதாகும் என்று கூறியுள்ளனர். மேலும், பதினைந்து மணி நேரம் தொடர்ச்சியாக செயல்படும் திறன் கொண்ட இவ்வியக்கி, நிமிடத்திற்கு பதினெட்டாயிரம் சுழற்சிகள் வரை சுழலும் ஆற்றல் பெற்றது. பொறியாளர்களின் இந்த கண்டுபிடிப்பு, தொடர்ந்து மேம்படும் நிலையில், இது மருத்துவ துறையில் ஓர் புரட்சியை ஏற்படுத்தும் என்பது, விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களின் ஒருமித்த கருத்தாகவே திகழும்.

இது தொடர்பாக வெளியடப்பட்ட வீடியோ: