குறிப்பு

இந்த வலைப்பூவைப் பற்றி உங்களின் கருத்துக்கள், விமர்ச்சனங்கள், சொல் மற்றும் அர்த்தத்தில் பிழை சுட்டிக்காட்டல் ஆகியவற்றை ‘அறிவுப்பூ’ ஆர்வத்துடன் வரவேற்கிறது...

புதன், 19 மார்ச், 2014

அண்டவியலில் ஓர் திருப்புமுனை

தந்தை தன் பிறந்த குழந்தை முதல் முதலாக கண் விழித்து பார்க்கும் தருணத்தில் அனுபவிக்கும் அதே உற்சாகமும் பரபரப்பும் இப்பொழுது பிரபஞ்சத்தின் பிறப்பை   ஆராயும் விஞ்ஞானிகளிடையே காணப்படுகிறது. அதற்கு காரணம்,  பிறந்த குழ்ந்தை எழுப்பும் கூச்சல்கள் போல, பிறந்த உடன் பிரபஞ்சம் எழுப்பிய செயல்பாடுகளின்  அறிகுறிகள் ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் (மார்ச் 17, 2014) செய்தி வெளியானது.

இந்த திருப்புமுனைக்கு முன் வந்த பாதை, இயற்பியல் மேதை ஆல்பர்ட் ஐன்ச்டீனிடமிருந்து தொடங்கியது. இவரது, வெகு பிரபலமான 'பொதுச் சார்பு கோட்பாடு' (' Big Bang Theory'), அண்டத்தின் வெளியும் காலமும் ஒருங்கிணைந்த தன்மையால், ஈர்ப்பலைகள் ( Gravitational Waves ) உருவாகும் என்னும் விளைவை  கணிக்கிறது. அந்த கணிப்பை சரி பார்க்க பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளின் உதவியால், ஈர்ப்பலைகளை கண்டறியும் முயற்சியில் ஈடு பட்டுள்ளனர். அதிலும் முக்கியமாக, பிரபஞ்சம் பிறந்த  உடன் வெளிப்படுத்தப்பட்ட ஈர்ப்பலைகளை கண்டறிவதில் அதிக ஆர்வம் காட்டினர். ஏனெனில், இந்த சிறப்பு வாய்ந்த ஈர்ப்பலைகள் கண்டுபிடித்தால், பிரபஞ்சம் பிறப்பை விளக்கும் 'பெரு வெடிப்பு கோட்பாடு' சரியாக இருக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.




நன்றி: நியூ ஸையன்டிஸ்ட்


ஈர்ப்பலைகள் கண்டறிவது கடினமான ஒன்று. ஆனால் அவ்வலைகளால் ஏற்படும் பாதிப்புகளின் அறிகுறிகளை ஆராய்வது மூலமாகவும், அவற்றின் இருப்பை தெரிந்து கொள்ளலாம். அத்தகைய அறிகுறிகள் இதுவரை  சில  கண்டுபிடிக்கப்பட்டாலும், தற்போதைய கண்டுபிடிப்பு மிக முக்கியமானதும் பெரு வெடிப்பு கோட்பாட்டிற்கு மிகுந்த வலு சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது.

பூமியின் தெற்கு துருவத்தில் இடம் பெற்றுள்ள 'பைசெப்' (' BICEP ' - Background Imaging of Cosmic Extragalactic Polarization ) எனப்படும் ஆய்வு நிலையத்தில் உள்ள வானியல் ஆராய்ச்சி கருவிகளால் இந்த கண்டுபிடிப்பு ஏற்பட்டது. இந்த கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு காத்திருக்கிறது என்று  இப்பொழுதே விஞ்ஞான வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

நன்றி: நியூ ஸையன்டிஸ்ட், விக்கிபீடியா

திங்கள், 17 மார்ச், 2014

இந்திய விஞ்ஞான கலாச்சாரம்





விஞ்ஞான ஜாம்பவான்கள் என்றதும், நம்முள் பலருக்கும் நினைவில் வருவது ஐன்ஸ்டீன், நியூட்டன், எடிசன் என்பவர்களே. 'இந்திய விஞ்ஞான ஜாம்பவான்கள்' என்றால் மட்டுமே, இந்தியர்கள் பெயர் நினைவுக்கு வந்தால் அது ஆச்சர்யப் படுவதற்கில்லை. உங்களால் எத்தனை இந்திய விஞ்ஞானிகளின் பெயர் குறிப்பிட முடியும்?

நம் நாடு பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தால் ஆண்டு  வந்த பொழுது, ஆங்கில வழிக்கல்வி அறிமுகப் படுத்தப் பட்டதோடு, அவ்வழிக்கல்வி கற்றால் மட்டுமே அரசு பணிக்கு தகுதி கிடைக்கும் என்ற கட்டாயமும் இந்தியர்கள் மீது திணிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் பாதிப்புகளிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை என்பதே யதார்த்தம். அவற்றால் எந்தளவுக்கு நன்மையும் தீமையும் விளைவித்தது என்ற கேள்வி விவாதத்திற்குரியது. இருந்தாலும், இந்த கட்டுரைக்கு தொடர்பான ஓர் தீய விளைவை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிரிட்டிஷார்களின் கல்வி முறையில் மேற்க்கத்திய கணிதம், விஞ்ஞானம் மட்டுமே கற்றுக்கொடுக்கப்பட்டது. பண்டை கால இந்திய மண்ணில் காணப்பட்ட விஞ்ஞான வளர்ச்சிகளும், இந்தியர்களின் கணித மற்றும் விஞ்ஞான பண்பாடும் புதைக்கப்பட்டது. நாம் உடல் அளவில் மட்டுமின்றி மனதளவிலும்
பிரிடிஷர்களுக்கு அடிமையானோம்.

இந்திய சுய ஆட்சி கண்ட பின்னும், இந்திய விஞ்ஞானத்தின் சரித்திரம் சிறிதளவே இந்தியர்களை சென்றடைந்தது என்பதே மிகுந்த வருத்தம்  அளிப்பதாகும். இந்நிலை மாறி வருகிறது. விஞ்ஞான வளர்ச்சிக்கு  இந்தியர்கள் பலரின் பங்களிப்பு உலகளவில் அங்கீகரிப்பு கிடைத்துள்ளது. இந்த அங்கீகாரத்தை நமது நாமே பெருமை படுத்திக்கொள்ள பயன்படுத்துவதில் எந்த உபயோகமும் இல்லை. மாறாக, இதனை நம் விஞ்ஞான கலாச்சாரத்தை மீட்பதற்கு ஓர் தூண்டுகோலாக பயன்படுத்த வேண்டும்.




படம்: ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய கணித மற்றும் வானவியல் மேதை ஆர்யபட்டாவின் சிற்பம். ஆனால் இச்சிற்பம் கலைஞனின் கற்பனையில் பிறந்ததே தவிர ஆர்யபட்டாவின் உண்மை உருவம் அன்று. அவரது தோற்றத்தை பற்றி எந்த தகவலும் நம்மிடையே இல்லை (!).