குறிப்பு

இந்த வலைப்பூவைப் பற்றி உங்களின் கருத்துக்கள், விமர்ச்சனங்கள், சொல் மற்றும் அர்த்தத்தில் பிழை சுட்டிக்காட்டல் ஆகியவற்றை ‘அறிவுப்பூ’ ஆர்வத்துடன் வரவேற்கிறது...

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

ஆய்வுக்கூடத்தில் அறிவை வளர்க்கலாம், மூளையை வளர்க்க?



                 “என்ன ? வீட்ல நாய் பூன வளர்க்கர மாதிரி மூளைய வளர்க்கறத பத்தி பேசுறேள்...உங்க மூளைல எதாவது களண்டடுத்தா?”, என்று பக்கத்து வீட்டு மாமி, இந்த கட்டுரையின் தலைப்பை பார்த்து கேள்வி எழுப்பலாம். ஆனால், இது கற்பனை கதையோ, ஏதோ களண்டதனால் ஏற்பட்ட உளரலோ இல்லை. சில நாட்களுக்கு முன், ‘இயற்கை’ ( Nature ) பத்திரிக்கையில் .வெளியான, ஓர் ஆய்வுத்தாள் பற்றிய செய்தியே இது.

ஆஸ்த்திரிய ( Austria ) நாட்டில், அறிவியல் கழகத்தில் ( Academy of Sciences ) உள்ள மூலக்கூற்று உயிரியல் நிலையத்தைச் ( Institute of Molecular Biology ) சேர்ந்த விஞ்ஞானிகள், ஒன்பது-வார மனித கருவில் வளரும் மூளையோடு பல ஒற்றுமைகள் கொண்ட, சில மில்லீ மீட்டர்கள் மட்டுமே அளவுடைய ஓர் மூளைப் போன்று உருப்பை, மனித கருவின் குருத்தணுக்களை உபயோகித்து ஆய்வு கூடத்தில் வளர்த்துள்ளனர்.

மனித மூளையானது, நாம் எத்தனயோ ஆச்சர்யமூட்டும் தொழில்நுட்பங்களையும், இயந்திரங்களையும் படைத்தாலும், அவறிற்கெல்லாம் பன்மடங்கு நவீனமும், அசாதாரணமும் வாய்ந்த்தாகும். அத்தகைய உருப்பு தாயின் வயிற்றில் உருவாகும் முறையை அறிவதற்கு இந்த ஆய்வு ஒரு படிக்கல்லாகும். ஆனாலும், கூடத்தில் வளர்க்கப்பட்ட உருப்போ, உண்மையான மனித கருவில் வளரும் மூளையைக் காட்டிலும் பல வகையில் பின்தங்கியது. உதாரணமாக, ஒன்பது வாரம் வளர்ச்சியடைந்த மூளையின் அனைத்து அங்கங்களும் இதில் கிடையாது. மேலும், இரத்தக்குளாய்கள் இல்லாத்தால், இதனால் மேலும் வளர்ச்சியடையக் கூடிய சக்தியற்றது. ஆகையால், இதை மூளை என்று சொல்வதை விட, இந்த நிலையத்து விஞ்ஞானிகள் குறிப்பிட்டது போல், மூளைப்பொருளால் ஆன உருப்பு ( “Cerebral Organoid“ ) என்று அளைப்பதே தகுந்தது.


Source : B.B.C. 


விஞ்ஞானிகளின் இம்முயற்சியால் வளரும் மனித மூளையில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ள ஓர் இணையில்லா வாய்ப்பு அளிக்கிறது. அத்தகைய பாதிப்புகளும், அவற்றை குணமாக்க தயாரிக்கப் பட்ட மருந்துகளை சோதிப்பதற்கும், எலிகளின் மீது இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகள், பயனேதும் அளிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் நம் மூளையில் காணப்படும் பல பிரத்தியேக குணங்கள், எலிகளில் காணப்படுவதில்லை. எனவே தற்போது ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்படும் உருப்பில், இந்த மருந்துகளின் விளைவை கண்டறிந்து, மூளை வளர்ச்சி சம்பந்தப்பட்ட பாதிப்புகளை குணப்படுத்துவதற்கு ஓர் அரிய பாதையை அளித்துள்ளது என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியைப் பற்றி ஆங்கிலத்தில் படிக்க நீங்கள் விரும்பினால், ‘தி இந்து’ விலோ, பி.பி.சி. யிலோ.படிக்கலாம்.

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

சனிப்பெயர்ச்சியும் சிகப்புப்பெயர்ச்சியும்

          உங்கள் வீட்டில் உள்ளவர்களோ, தொலைக்காட்சியிலோ, ஜோசியம் பற்றி பேசும் பொழுது, சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி என்றெல்லாம் நீங்கள் கேட்டிருக்கலாம். ஜோசியம் அறிவியலுக்கு புறம்பான ஒன்றானாலும், அறிவியலிலும் ஒரு வித பெயர்ச்சி உண்டு. அதுதான் ‘ Red Shift ‘ எனப்படும் சிவப்பு பெயர்ச்சி.

இந்த சிவப்பு பெயர்ச்சியை புரிந்து கொள்ள, முதலில் அதன் அடிப்படையில் உள்ள ஒப்புமை வேகத்தை ( Relative Velocity ) பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் காண்போம். நாம் இரயிலில் பயணம் மேற்கொள்ளும் போது அருகே உள்ள தண்டவாளத்தில் எதிர் திசையிலிருந்து மற்றொரு இரயில் வந்து கொண்டிருப்பதாக எண்ணிக்கொள்வோம். அப்பொழுது முதல் இரயிலில் அமர்ந்து கொண்டு முன்னே வரும் இரயிலை கவனித்தால், அதன் உண்மையான வேகத்தை விட அதிக வேகத்தில் வருவது போல் தோன்றும் இந்த அதீத வேகமே ஒப்புமை வேகம் என்பதாகும். இதே, தண்டவாளங்களின் அருகே ஓரிடத்தில் நின்று கொண்டிருப்பவருக்கு, இரண்டு இரயில்களுமே அதன் உண்மையான வேகத்தில் வருவது போல் தெரியும். இந்த ஒப்புமை வேகத்தினால் ஏற்படுவதே ‘டாப்ளர்’ விளைவு ( Doppler Effect ).

இரயில்கள் தண்டவாளதில் பயணம் செய்வது போல், மின்காந்த அலைகள் காற்றில் (அல்லது எதேனும் ஊடகத்தில்) பயணம் செய்யக்கூடியவை. எனவே, இவ்வலைகளும் டாப்ளர் விளைவை வெளிப்படுதக்கூடியவை ஆகும். இதற்கு எடுத்துக்காட்டாக இன்னொரு நிகழ்வை பார்க்கலாம். நாம் வண்டியில் சென்று கொண்டிருக்கும் பொழுது, ஓர் மருத்துவ ஊர்தி ( Ambulance ) நம் திசையை நோக்கி ஒலி எழுப்பிக்கொண்டே வருகிறது. சிறிது நேரத்திற்கு பின் அது நம்மை தாண்டி சென்று நம்மை விட்டு விலகி செல்கிறது. ஊர்தி நம்மை நோக்கி வரும் பொழுது எழுப்பிய ஒலிக்கும், நம்மை விலகி செல்லும் பொழுது எழுப்பிய ஒலிக்கும், வித்தியாசம் இருக்கும். அடுத்த முறை, நீங்கள் வெளியே இருக்கும் பொழுது, இத்தகைய வாய்ப்பு அமைந்தால் இந்த ஒலியை கூர்ந்து கவனியுங்கள். இந்த வித்தியாசத்தை நீங்களும் உணரலாம்.


Source: http://scifun.chem.wisc.edu/WOP/Doppler.html


இந்த நிகழ்வுக்கு பின்னே உள்ள அறிவியலை இன்னொரு நாள் தெளிவாக பார்க்கலாம். இப்பொழுது மேற்கண்ட உதாரணத்திகலிரிந்து புரிந்து கொள்ள வேண்டிய இரு முக்கிய விஷயங்களை மட்டும் பார்க்கலாம்.

1. டாப்ளர் விளைவு மூன்று பொருட்களைச் சார்ந்தது : (i) மூலப்பொருள் ( Source ). மேற்கண்ட உதாரணத்தில், ஒலி எழுப்பும் மருத்துவ ஊர்தியை மூலப்பொருளாக கொள்ளலாம். (ii) பார்வையாளர் ( Observer ). வண்டியில் அமர்ந்த்திருக்கும் நம்மை பார்வையாளராக வைத்துக்கொள்ளலாம். (iii) மேலும் ஒலி அலைகள் பயனம் செய்வதைப் பற்றி கற்கும் பொழுது, பயணம் செல்லும் ஊடகமும் ( Medium ) ஒரு பொருட்டாகும்.

2. மூலப்பொருள், பார்வையாளர், அலை :இவை மூன்றும் அசையும் வேகத்தை பொருத்து, டாப்ளர் வெவ்வேறு முடிவுகளை அளிக்கும்.. இதற்கு, முன்னே குறிப்பிட்டது போல், ஊர்தி நம்மை நோக்கி மற்றும் விலகி செல்லும் பொழுது விளையும் ஒலியின் வேறுபாடுகள் இதற்கு ஓர் உதாரணம்.


ஒலி ஒரு வித மின்காந்த அலை என்று நாம் முன் ஒரு கட்டுரையில் அறிந்தோம். ஒலி பயணம் செய்யும் போது ஏற்படும் டாப்ளர் விளைவு, மற்றய மின்காந்த அலைகளுக்கும் பொருந்தும். விண்வெளியில் மின்காந்த அலைகளுக்கு டாப்ளர் கோட்பாட்டினால் ஏற்படும் ஒரு விதமான மாறுபாட்டினையே ‘சிவப்பு பெயர்ச்சி’ என்று அளைக்கப்படுகிறது. சனிப்பெயர்ச்சி நம் தலையெழுத்தை  பாதிக்கின்றதா இல்லயா என்பதற்கு நாம் பதிலளிக்க முடியாது. ஆனால், சிவப்பு பெயர்ச்சி, நாம் பிரபஞ்சத்தின் பிறப்பை விளக்க உருவாக்கிய அனைத்து கோட்பாடுகளையும் முற்றிலுமாகவும் நிரந்தறமாகவும் பாதித்தது. எவ்வாறு? தொடர்ந்து அறிவோம்

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

பிரபஞ்சத்தின் வானவில்


கருமேகங்கள் நீல வானை சூழ்கின்றன, சூரியன், மழை மேகங்களால் முழுமையாக மூடப்படும் வேளை. அப்பொழுது ஒளிக்கதிர்கள் மேகங்களிள் தங்கி இருக்கும் மழை நீர் துளிகளால் சிதரடிக்கப்பட்டு, பல வர்ணங்கள் நிறைந்த வானவில்லாக தோற்றமளிக்கிறது. இந்த காட்சியை கண்டு நெகிழ, இரு கண்கள் போதுமோ? என்று கவி பாடி மகிழ்ந்துள்ளனர். சூரிய ஒளியைப் போன்று வெள்ளை ஒளியின் பகுப்புகளே வர்ணங்கள் என்று ஐஸக் நியூடன் (Issac Newton) கண்டறிந்தார். எப்படி வர்ணங்கள், ஒளியின் பல பிரிவுகளோ, ஒளியும் மாபெரும் பிரிவுகளுள் ஒன்று. அப்பிரிவுகள் அனைத்தும் மின்காந்த அலைகள் என்று அளைக்கப்படுகின்றன. இவ்வகை அலைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்தால் அதனை இப்பிரபஞ்சத்தின் வானவில் என்று கூட கற்பனை செய்து கொள்ளலாம். இயற்பியலில், இதற்கு மின்காந்த அலைக்கற்றை (Electromagnetic Spectrum) என்று பெயருள்ளது.

வானொலி, தொலைக்காட்சி, தொலைப்பேசி, செயற்கைக்கோள் போன்ற கருவிகளில் தொலைதொடர்பை சாத்தியமாக்கும் வானொலி அலைகள் (Radio Waves), நம் காதுகள் உணரக்கூடிய ஒலி அலைகள் (Audio Waves), சமையலரையில் உபயோகிக்கப்படும் மைக்ரோவேவ் அடுப்பு வெளியேற்றும் நுண்ணலைகள் (Microwaves), வெப்பநிலை கண்காணிக்கும் கேமரா உபயோகிகும் அகச்சிவப்புக் கதிர்கள் (Infra-red radiation), ஒளிக்கதிர்கள் (Visible radiation) (அதில் அடங்கும் வண்ணங்கள்), தண்ணீரை சுத்தீகரிக்கப் பயன்படுத்தப் படும் புற ஊதா கதிர்கள் (Ultra-violet radiation), எலும்பு முரிவு கண்டறிய பயன்படுத்தப்படும் ஊடு கதிர்கள் (X-radiation), அணு உலையிலிருந்து வெளிப்படும் காம்மா* (Gamma radiation) கதிர்கள், இவையனைத்தும் மின்காந்த அலைக்கற்றையின் கீழ் அடங்கும்.

Source : Wikipedia

காலையில் நீலமாக தோற்றமளிக்கும் ஆகாயம், மாலையில் சிவந்து காணப்படுகிறது. (ஏன் என்று தெரியுமா?). இவ்வாறு நாம் காணும் வானவில்லின் வண்ணங்கள் மாறுபடுவது போல், மின்காந்த அலைகளும் ஒன்று இன்னொன்றாக மாற முடியுமா? உண்மையில், இதைப் போல் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், இந்த மாறுதலே, நம் பிரபஞ்சத்தின் உருவாக்கத்தைப் நாம் அறிந்து கொள்ள இணையற்ற தடையமாகவும் விளங்குகிறது. எவ்வாறு என்று தொடர்ந்து காணலாம்...


* ’காமா’ என்ற வார்த்தையில் வரும் ‘கா’, ‘காந்தி’யில் ( Gandhi ) உச்சரிக்கப்படுவது போல் உச்சரிக்கப்பட வேண்டும்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

பெரு வெடிப்பு கோட்பாடு - Big Bang Theory


          நமது பிரபஞ்சத்தின் உருவாக்கத்தை விளக்க முயலும் கோட்பாடுகளுள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுவதும், பிரபலம் வாய்ந்ததும் ஆனது ‘Big Bang‘ கோட்பாடு. இதனைத் தமிழில், ‘பெருவெடிப்புக் கோட்பாடு’ என்று மொழி பெயர்க்கப்படுகிறது ( பெரு வெடிப்பு கோட்பாடு in Wikipedia ). இந்த கோட்பாட்டை விவரிப்பதற்க்கு முன், ஓர் சிறிய முன்குறிப்பைக் காண்போம்.

அறிவியல் வேகமாக வளர்ந்து வருகிறது. நாம் பள்ளியில் கற்ற, அணுவமைப்பு ( Atomic Structure ) முதல் பிரபஞ்ச உருவாக்கம் வரை, பல்வேறு கோட்பாடுகள், எண்ணற்ற மாறுதல்களையும், மேம்பாடுகளையும் சந்தித்துள்ளது. இந்த வேகத்திற்கு, நாம் அன்றாடு உபயோகிக்கும் மொழியானது, ஈடு கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. தற்போதய அறிவியல் கோட்பாடுகள், கற்பனைக்கு எட்டாத சுவாரசியமான சாத்தியங்களை அளிக்கின்றன.இவற்றை பேச்சுவழக்கு மொழியை உபயோகித்து, எளிதில் புரியக்கூடிய வகையில் விளக்குவது என்பது கடினமான சவாலாகும்.


அவ்வழியே, பெருவெடிப்பு கோட்பாட்டை விளக்குவதும், ஓர் சவால் என்றுதான் கூற வேண்டும். இக்கோட்பாட்டின் பெயரைக்கொண்டே, இதனை தவறாக புரிந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், ‘பெரு வெடிப்பு’ என்று இதனை அளைத்தாலும், பிரபஞ்சம் ஆரம்ப தருணத்தில், பெரிது-சிறிது என்று அளவு பார்க்கும் பேச்சுக்கே இடம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், ‘இடம்’ என்பதே கிடையாது. அடுத்து, ‘வெடிப்பு’ என்ற சொல். இந்த சொல்லைப் படித்த உடன், தீபாவளி பட்டாசு தான் நம் கண் முன்னே தோன்றும். ஆனால், ‘பெரு வெடிப்பு’ நடந்த பொழுதோ, பட்டாசு வெடித்தாற்போல், நம்மால் பார்க்கக்கூடிய வெளிச்சமோ, கேட்கக்கூடிய சத்தமோ, ஏற்படவில்லை. அச்சோ..!, சற்று பொறுங்கள், நான் தெரியாமல், ‘பொழுது’ என்ற வார்த்தையை உபயோகித்து விட்டேன். பிரபஞ்ச ஆரம்பம் தான், பொழுதின் ஆரம்பம் ( Beginning of Time ) என்பது தற்போது நிலவும் கருத்து. என்ன? தலை சுற்றுகிறதா? இந்த தலை சுற்றுதலுக்கு இடையே தான், உலக விஞ்ஞானிள், பல கேள்விகளுக்கு, பதில் தேடி போராடி வருகின்றனர். மேலும் இதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், காலம் மற்றும் இடம் ( Space and Time ) இல்லாத, அறிவாற்றலுக்கு புலப்படாத ஓர் நிலையை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்...  

சனி, 24 ஆகஸ்ட், 2013

இந்தியா பங்கு கொள்ளும் உலகளாவிய வானியல் ஆராய்ச்சி

          நமது பிரபஞ்சம் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானதாக விஞ்ஞானம் கணக்கிடுகிறது. அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் ஓர் விளைவு, இன்று நாம் பூமி என்று அளைக்கும் கோள். நாம் அறிந்த  பிரபஞ்ச மண்டலத்தில், உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழளை கொண்ட ஒரே இடமான, நமது பூமியில் இருந்து, மனித இனத்தைச் சார்ந்த நாம், பிரபஞ்சத்தின் தொடக்கத்தைப் பற்றி அறிய முயல்கிறோம்.
இந்த முயற்சி பல்லாயிர வருடங்களாக தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அம்முயற்ச்சியில் அடுத்த படியாக, 2005 ஆம் ஆண்டு, தொடங்கப்பட்ட, Murchison Widefield Array என்ற செயல் திட்டமாகும்.

Murchison Widefield Array
 இந்த திட்டத்தின் சில முக்கிய தகவல்களைக் காண்போம்:

·         இத்திட்டம், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆராய்ச்சி மையங்களோடு ஒருங்கிணைந்து செயல்படுவது இந்தியாவின், இராமன் ஆராய்ச்சி மையம்.
·         300 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்ட இந்த தொலைநோக்குக் கருவி, ஆஸ்திரேலியாவின் பேர்த் (Perth) நகரிலிருந்து 800 கி.மீ. வடக்கே அமைந்துள்ளது.
·         இக்கருவி 2048 இருதுருவ அலை-உணர் கம்பங்களைக் (Dipole Antennas) கொண்டுள்ளது. இக்கம்பங்கள் உணரும் மின்காந்த அலைளை, டிஜிட்டல் மயமாக்கி, ஆய்வுக்காக சக்தி வாய்ந்த கணினிக்கு அனுப்பப்படுகிறது.



·         கம்பங்களை வடிவமைப்பு மற்றும் உருவாக்கும் செயலில், இராமன் ஆராயச்சி மையத்திற்கு முக்கிய பங்குண்டு.  இந்த கருவிக்கு அவசியமான அதி வேக டிஜிட்டல் மின்னணுவியல் மீதான தொழில்நுட்ப நிபுணத்துவத்தில் இந்த மையம் முன்னோடியாக விளங்குகிறது என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, பிரயன் ஷ்மிட் ( Brian Schmidt ) சிறப்பித்துள்ளார்.


இந்த செய்தி, 23 ஆகஸ்ட் 2013 ‘தி இந்து’ பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையின் பின்னணியில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை இனி வரும் பூக்களில் காணலாம்.   

முதற்பூ

ஒரு பக்கம் எழுத்தார்வமும், மறு பக்கம் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் இவ்விரண்டால் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராயும் ஆர்வமும் , என்னை இவ்வலைப்பூ தொடங்க  தூண்டுதலாக அமைந்தது. ஆங்கிலத்தில் பல வலைபூக்கள் தொடங்கி, அவற்றை வெவேறு காரணங்களால் பாதியில் கைவிட்டேன். இம்முறையோ, விஞ்ஞான வளர்ச்சியும், தொழில்நுட்ப ஆச்சர்யங்களும், உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு தங்கள் தாய் மொழியில்   சென்றடைந்து பயனளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால், இந்த வலைப்பூ, முடிவின்றி தொடரும் என்று நம்புகிறேன்.

இந்த  அறிவுப்பூவின் முதற் பூவாக. நான் சமீபத்தில் கண்டு வரும் ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பற்றி தெரிவிக்கிறேன். டிஸ்கவரி
 குழுமத்தின், டிஸ்கவரி சயின்ஸ் ( Discovery Science ) , அறிவியலுக்கென்று  பிரத்யேக தொலைக்காட்சி. இதில் , பிரபலம் வாய்ந்த "Through the Wormhole " என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்  படுகிறது .  இது, இந்நிகழ்ச்சியின் நான்காவது பகுதியாகும். இருபத்தி ஓராம் நூற்றாண்டில், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், பதிலளிக்க முயற்சிக்கும் கேள்விகளை, இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுவதோடு, உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அறிவியல் நிபுணர்கள் தங்களது ஆராயும் முறையையும்  , கண்டுபிடிப்புகளையும் பகிர்ந்து கொள்கின்றனர்.



இந்த நிகழ்ச்சியின் தனித்துவமோ, விஞ்ஞானம் சார்த்து அன்று; இந்நிகழ்ச்சியை  தொகுத்தளிக்கும் பிரபல ஹாலிவுட் நடிகர், மோர்கன் பிரீமன் ( Morgan Freeman ). தனது தனித்தன்மை வாய்ந்த, கம்பீரம் மிக்க குரலை இந்நிகழ்ச்சிக்கு கொடுத்துள்ளார். 1994ஆம் ஆண்டு, இவர் துணை நடிகராக  நடித்து வெளிவந்த " The Shawshank Redemption " என்ற ஆங்கிலத்  திரைப்படம், உலக திரைப்பட தரவரிசையில், தொடர்ந்து முதன்மை இடங்களில் இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம், படத்தை விவரிக்கும் இவரது குரலே, என்பது ரசிகர்களின் கருத்து. இது எந்த வகையிலும் மிகையாகது என்பதை  இப்படத்தை பார்பவர்கள் ஒப்புக்கொள்வர்.

ஆங்கிலத்தில்  ஒளிபரப்பப்படும் வியக்க வைக்கும் இந்நிகழ்ச்சி கூடிய விரைவில், தமிழில் ஒலி  சேர்கை செயப்பட்டு , டிஸ்கவரியின் தமிழ் மொழி தொலைக்காட்சியில்  வெளிவர வேண்டும். அவ்வாறு வெளிவரும் சூழலில், Freemanக்கு குரல் யார் அளிப்பார்? இதற்க்கு முன், யார் அளித்தார்? என்ற கேள்விகளுக்கு நான் பதில் அறியேன்.