இந்த வலைப்பூவைப் பற்றி உங்களின் கருத்துக்கள், விமர்ச்சனங்கள், சொல் மற்றும் அர்த்தத்தில் பிழை சுட்டிக்காட்டல் ஆகியவற்றை ‘அறிவுப்பூ’ ஆர்வத்துடன் வரவேற்கிறது...
அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்று, இணையதள தொழில்நுட்பங்கள் உருவாக்கும் கூகிள் ( Google ) நிறுவனம். இந்த வாரம், இந்நிறுவனத்தின் இணை-நிறுவனரான செர்கி பிரின் ( Sergey Brin ), சுய-ஓட்டி கார்களை தயாரிக்கும் பணிகளில் கூகிள் ஈடுபட்டுள்ளது என்று அறிவித்தார். இது வரை, டொயோடா, லெக்சஸ் போன்ற பிற உற்பத்தியாளர்களின் கார்களை மாறுபடுத்தி, ஓட்டுனர் இன்றி இயக்கி வந்தது கூகிள். சுய-ஓட்டி தொழில்நுட்பம் இன்னும் ஆராய்ச்சி நிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது வரை கூகிள் உபயோகித்த கார் ( நன்றி : விக்கிபீடியா )
காரின் வடிவமைப்பு பற்றிய விவரங்களையும் கூகிள் வெளியிட்டது. மின் சக்தியில் செயல்படும் இந்த கார், பாதுகாப்பு கருதி அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு இருபத்தைந்து மைல்கள் என்று வரையறுக்கப் பட்டுள்ளது.
கூகிள் தயாரிக்கும் சுய-ஓட்டி கார் ( நன்றி : பி.பி.சி. )
மேலும், காரை கட்டுபடுத்த, ஸ்டீயரிங் வீல், கியர் பாக்ஸ் என்று எதுவும் கிடையாது - வெறும் செல்/நில் பட்டன்கள் மட்டுமே ! சாலை விபத்துகளை முற்றிலுமாக தவிர்க்கக் கூடிய வல்லமை படித்திருந்தாலும், சுய-ஓட்டு தொழில்நுட்பம் இன்னும் கூட்ட நெரிசல் மிக்க நகர சாலைகளில் அதன் திறன் முழுமையாக இது வரை சோதனை செய்யப் படவில்லை.
மே 26ஆம் தேதி இந்தியாவின் பதினைந்தாவது பிரதம மந்திரியாக பதவி ஏற்றார், திரு. நரேந்திர மோடி. அவரோடு, 44 மந்திரிகள் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுள், நீரிழிவு நோய் நிபுணரான டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் அடுத்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறையின் மந்திரியாக பதவியேற்றார்.
வீட்டில் வசதியாக உட்கார்ந்த இடத்தில் இருந்து, இணையதளத்தின் வாயிலாக - உண்ணும் உணவு ஆகட்டும், உடுத்தும் உடை ஆகட்டும் - அனைத்தையும் 'ஆர்டர்' செய்து, அவற்றை வீட்டிற்கே 'டோர்-டெலிவரி' செய்ய வைப்பதே இப்பொழுதைய சௌகர்யம். இப்போ உங்கள் கற்பனைக்கு கொஞ்சம் வேலை. உங்கள் உடம்பில், ஓர் உறுப்பில், சில உயிரணுக்கள் நோய்க்கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. அதனால் உங்கள் உடல் நிலையே பாதிக்கிறது. மருத்துவர் அளிக்கும் மருந்து மாத்திரைகளை விழுங்கும் கட்டாயம். அனால், மருந்துகள், நோய்வாய்ப்பட்ட உயிரணுக்களை சீரமைப்பதோடு நில்லாது, ஆரோக்கியமான உயிரணுக்களையும் பாதிப்பதால், சில பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இந்நிலையில், தேவையான அளவு மருந்தை மட்டும் 'ஆர்டர்' செய்து, குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட உயிரணுக்களுக்கு மட்டும் மருந்தை 'டெலிவரி' செய்வது தகுந்ததாக தெரிகிறதா ? ஆனால், இது கற்பனைக்கு மட்டும் உகந்த பகல் கனவு போல் தோன்றுகிறதா ? அறிவாற்றலைக் காட்டிலும் கற்பனை வளம் அறிவியலுக்கு முக்கியம் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது வெறும் பேச்சுக்காக மட்டும் அல்ல. இந்த கனவும் நனவாக்க படிக்கல்லாக அமைந்துள்ளது, கடந்த வாரம் அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தின் பொறியாளர்களின் உருவாக்கம்.
மின்சக்தியால் செயல்படும் இயந்திரங்களின் கருவாக விளங்குவது மின்சார இயக்கிகள் ( Electric Motors ). மனித உடம்புக்குள் புகுந்து, உயிரணுக்களுக்கு மருந்தை செலுத்துவதற்கு பயன் படுத்தப்படும் இயந்திரங்கள், உயிரணுவின் அளவில் இருக்க வேண்டும். இவற்றை நானோ ரோபோக்கள் என்று அழைக்கின்றனர். மின்சாரத்தால் இயங்கும் நானோ ரோபோக்களை செய்வதற்கு பெரும் சவாலாக இருப்பது, அவற்றை செயல்படுத்தும் மின் இயக்கிகளும் நானோ அளவில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம். அவ்வழியே, பொறியாளர்கள், உலகிலேயே சிறியதுமான, அதிக சுழற்சிகள் கொண்டதுமான, நீடித்து உழைக்கக்கூடியதான ஓர் நானோ மின் இயக்கியை உருவாக்கியுள்ளனர்.
இந்த இயக்கி ஓர் உப்பு படிமத்தை காட்டிலும் ஐநூறு மடங்கு அளவில் சிறியதாகும் என்று கூறியுள்ளனர். மேலும், பதினைந்து மணி நேரம் தொடர்ச்சியாக செயல்படும் திறன் கொண்ட இவ்வியக்கி, நிமிடத்திற்கு பதினெட்டாயிரம் சுழற்சிகள் வரை சுழலும் ஆற்றல் பெற்றது. பொறியாளர்களின் இந்த கண்டுபிடிப்பு, தொடர்ந்து மேம்படும் நிலையில், இது மருத்துவ துறையில் ஓர் புரட்சியை ஏற்படுத்தும் என்பது, விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களின் ஒருமித்த கருத்தாகவே திகழும்.
தேர்தல் பற்றிய கார சார செய்திகள், ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் உடனுக்குடன் அறிவுப்புகள், சூப்பர் ஸ்டாரின் படம் வெளியீட்டை ஒட்டிய எதிர்ப்பார்ப்புகள் - இவற்றிற்கிடையே உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) கடந்த வாரம் ஓர் திடுக்கிடும் அறிக்கையை வெளியிட்டது. அது எந்த பரபரப்பும் ஏற்படுத்தாது சென்ற இடம் தெரியாமல் காணாமல் போனது. மனித இனத்திற்கு கடும் அழிவை உண்டாக்கக் கூடிய ஓர் மறைமுக ஆபத்தின் எச்சரிக்கை ஒலியாக ஒலிக்கும் அந்த அறிக்கைக்கு எந்த அளவிற்கு உலக சமுதாயங்கள் ஈடு கொடுத்துள்ளது என்பது பெரும் கேள்விக்குறி.
1945ஆம் ஆண்டு, 'பென்சில்லின்' (Penicillin) என்னும் பாக்டீரியா நோய்க்கிருமிகளுக்கு எதிராக செயல்படும் 'அன்டிபயாடிக்' (Antibiotic) மருந்தை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றார் அலெக்சாண்டர் பிளெம்மிங் (Alexander Fleming). அத்தருணத்தில், இவ்வகை மருந்துகள் முறையின்றி உபயோகித்தல் வருங்காலத்தில், மருந்து வலு இழக்கும் வகையில் நோய்க்கிருமிகள் மாறக்கூடும் (Mutation) என்று கூறினார். சராசரியாக எழுபது ஆண்டுகளக்குப் பின், பிளெம்மிங்கின் வார்த்தைகள் பலித்துவிட்டதோடு, நடைமுறையில் கட்டின்றி நிகழ்ந்து வருகிறது என்று உலக சுகாதார அறிக்கை கூறுகின்றது
தேவையில்லாது அன்டிபயாடிக் மருந்து எடுத்து கொள்ளுதல், மருந்து சீட்டின்றி அன்டிபயாடிக் மருந்துகளை வாங்குதல் போன்ற பழக்கங்களால், இந்த மருந்துகளின் செயல்பாட்டினை பற்றி பாக்டீரியா அறிந்து அதனை எதிர்க்கும் குணாதிசயங்களை வளர்த்துக்கொள்கின்றது. இக்குணாதிசயங்கள் அடுத்த தலைமுறை பாக்டீரியாக்களை சென்றடைகிறது. இவ்வாறு, பல அன்டிபயாடிக் மருந்துகளை எதிர்க்கும் குணாதிசயங்கள் கொண்ட பாக்டீரியாக்களையே 'சூப்பர் பக்' (Super Bug) என்று அழைகின்றனர். இதனால், சிறு காயங்கள் கூட, பாக்டீரியா காரணமான நோய்கள் ஏற்ப்பட்டு, உயிரையே குடிக்க வழி வகுக்கும் என்று இவ்வறிக்கை அச்சம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த அன்டிபயாடிக் எதிர்க்கும் நோய்க்கிருமிகள் பற்றிய, ஆராய்ச்சிக்கான போதிய அளவு தகவல், அனைத்து உலக நாடுகளிடமிருந்து சேகரிக்க வசதிகள் இல்லை, என்று அறிக்கை வெளியிட்டுள்ளது, இந்த ஆபத்தை பற்றிய நமது அறியாமையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த அறிக்கை வெளியீட்டின் வாயிலாக, உலக நாடுகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க தொடங்க வேண்டும் என்று, உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் இட்டுள்ளது.