குறிப்பு

இந்த வலைப்பூவைப் பற்றி உங்களின் கருத்துக்கள், விமர்ச்சனங்கள், சொல் மற்றும் அர்த்தத்தில் பிழை சுட்டிக்காட்டல் ஆகியவற்றை ‘அறிவுப்பூ’ ஆர்வத்துடன் வரவேற்கிறது...

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

நாமறிந்த பிரபஞ்சம்: ஓர் பார்வை - The Scale of the Known Universe

            நமது பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒளி, வினாடிக்கு மூன்று லட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடியது. இந்த வேகத்திலும், நம்மால் கண்டறியக் கூடிய பிரபஞ்ச எல்லையிலிரிந்து ஒளி பயணிக்க, 1370 கோடி வருடங்கள் எடுத்துக்கொள்ளும். இவ்வியக்கத்தக்க தூரத்தை புரிந்து கொள்ள, அமெரிக்க இயற்கை வரலாறு அருங்காட்சியகம் ஓர் நிகழ்படத்தை சில வருடங்களுக்கு முன் வெளியிட்டது. இதை, நீங்களும் கண்டு மகிழலாம்:  



தட்பவெப்ப நிலை மாற்றம்: பரபரப்பு அறிக்கை – Latest IPCC Report on Climate Change

       தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு – Intergovernmental Panel on Climate Change (IPCC) ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை, பூமியில் தட்பவெப்பநிலை மாற்றம் குறித்த சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவுகளையும், கணிப்புகளையும் அடங்கிய ஓர் விரிவான அறிக்கையை வெளியிடுகிறது. 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையை தொடர்ந்து, இவ்வாண்டு இம்மாத இறுதியில் தனது ஐந்தாவது அறிக்கையை வெளியிட உள்ளது.


       இந்த அறிக்கையின் இறுதி வரைவு நகலில் காணப்படும் சில முக்கிய புள்ளிகளை பல்வேறு பத்திரிக்கைகளில் சென்ற வாரம் வெளியிடப்பட்ட்து அவை, கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

       1951 முதல் 2012 வரை, புவி வெப்பமடைதலின் விகிதம், பத்தாண்டுக்கு 0.12°C என்று அளவிடப்பட்டது. ஆனால், கடந்த பதினைந்து ஆண்டுகளில் (1998 முதல் 2012 வரை), இந்த விகிதம், பத்தாண்டுக்கு 0.05°C என்று குறைந்தே அளவிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த பதினைந்து ஆண்டு காலகட்டத்தில் புவி வெப்பமடைதலின் விகிதம், நீண்ட கால விகித அளவினைக் காட்டிலும் நாற்பது சதவிகிதம் குறைந்துள்ளது.

         மேலும், இந்த நூற்றாண்டு முடிவடையும் வேளையில், உலக சராசரி வெப்ப நிலை, தொழிற்சாலைகள் தொடங்குதலுக்கு முன் நிலவிய வெப்ப நிலை காட்டிலும், 1.5°C உயர அதிக வாய்ப்பு இருப்பதாகவும், 2°C க்கு மேல் உயர, குறைந்த வாய்ப்பு இருப்பதாகவும், 4°C க்கு மேல் உயர மிகக் குறைந்த வாய்ப்பு இருப்பதாகவும் இவ்வறிக்கையில் கணிக்கப்பட்டதாக இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          இந்த அறிக்கையில், கறியமில வாயு அளவு அதிகரிப்பதனால் சுற்றுபுறத்தின் மீதான பாதிப்பு பற்றியும் குறிப்பிட்டுள்ளது. இந்த பாதிப்பை அளவிட,  கறியமில வாயு அளவு இரட்டிப்பாகயின், பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பு கணிக்கப்படுகிறது. முன்னர், இக்குழு வெளியிட்ட அறிக்கைகள் படி, வெப்ப நிலை அதிகரிப்பு 2°C முதல் 4.5°C வரை இருக்கக்கூடும் என்று கணிக்கப் பட்டது. ஆனால், தற்போது வெளியிடப் பட உள்ள அறிக்கையிலோ, கறியமில வாயு அளவு இரட்டித்தால் இந்த அதிகரிப்பு 1.5°C மட்டுமே இருக்கக்கூடும் என்று குறைந்து கணிக்கப் பட்டுள்ளது.

       தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழுவின் அறிக்கையை கொண்டே, தட்பவெப்பநிலை மாற்றம் சார்ந்த உலக நாடுகளின் அடுத்த கட்ட நடவடிக்கை முடிவெடுக்கப்படும்.

        இந்த அறிக்கையில் வெளியிடப்பட உள்ள, தட்பவெப்ப நிலை மாற்றம் முன்பு கணித்தாற் போல், வேகமாக அதிகரிக்கவில்லை என்ற தகவல், இனி வரும் நாட்களில், மிகுந்த விவாதங்களுக்கும், விளக்கங்களுக்கும் ஓர் பொருட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

வியாழன், 12 செப்டம்பர், 2013

இந்தியாவின் பார்வையில் செவ்வாய் - India's Mars Mission

           ஏறத்தாழ  40 கோடி கி.மீ. தூர பயணம்; இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இன்னொரு மைல்கல்; விண்வெளி ஆராச்சியின் வளர்ச்சிக்கு ஓர் தூண்டுகோல் – இவ்வாறு இந்தியாவின் செவ்வாய் கிரக ஆய்வு (Mass Orbiter Mission) பயணத்தை வர்ணித்துக் கொண்டே போகலாம். இன்னும் ஒரு மாத காலத்தில், இந்த ஆய்வை மேற்கொள்ளும் விண்கலம், விண்ணில் ஏவும் தயார் நிலையை அடைந்துள்ளது. 

          1350 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தை அடைய ஒன்பது மாதங்கள் எடுத்துக்கொண்டு, அதன்பின் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் சுற்றி வரும். இந்த விண்கலம் அக்டோபர் 21 முதல் நவம்பர் 19 வரை உள்ள இடைப்பட்ட நாட்களில் ஸ்ரீஹரிகோட்டா நிலையத்திலிருந்து புறப்படும் என்று இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் இரசாயன தன்மையை பற்றி ஆராய, ஐந்து வகையான கருவிகள், இக்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அவற்றுள், உயிரைத் தாங்கும் திறன் கொண்ட மீத்தேன் (Methane) வாயு இருப்பதை கண்டறியும் கருவியும் ஒன்று.

Source : The Hindu

         அதிக சக்தி பெற்ற GSLV ஏவுகணைகள் தயார் நிலையில் இல்லாததால், எடையிலும், சக்தியிலும் குறுகிய PSLV ஏவுகணைகளை உபயோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, ஆய்வின் இயக்குனர் ச.அருணன் கூறியுள்ளார். இதனால், இயல்பாக செவ்வாய் திசை நோக்கி ஓர் கலனை அனுப்ப எடுக்கும் ஓரு நாள் கால அளவு அல்லாது, தற்போதைய கலனை சரியான பாதையில் அனுப்ப 20 நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்று அவர் குறுப்பிட்டார். இந்த இருபது நாட்களில், விண்கலம் ஆறு முறை பூமியை சுற்றி வருவதோடு, அதன் புவியீர்ப்பு சக்தியையே தனக்கு தேவையான உந்து சக்தியாய் உபயோகித்துக் கொண்டு, தனது 9-மாத பயணத்தை தொடங்கும்.

      450 கோடி செலவில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு வெற்றிகரமானால், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, செவ்வாய்க்கு கலம் அனுப்பிய உலகின் நான்காவது ஆராய்ச்சி மையம் என்ற சிறப்பைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

திங்கள், 2 செப்டம்பர், 2013

இன்று - செப்டெம்பர் 2, 2013


 Geomagnetic Storm  - Source: Wikipedia

      இதே நாள், 1859ஆம் ஆண்டு, வரலாற்றில் மனிதர்களால் பதிவு செய்யப்பட்ட மிக சக்திவாய்ந்த சூரிய சூராவளி (Solar Storm) பூமியின் காந்தமண்டலத்தை (Magnetosphere) தாக்கியது. சூரியனின் மேற்பரப்பிலிருந்து கொந்தளித்தெழும்பும் சூரிய கிளர்சிகளால் (Solar Flares) ஏற்படும் இத்தகைய சூராவளி, மின்காந்த அலைகளைச் சார்ந்த தொலைதொடர்பினை பாதிக்கக் கூடியவை. அன்று ஐரோப்பா, வட அமெரிககாவில் உபயோகித்தில் இருந்த தந்தி (Telegraph) சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன.  

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

இன்று - செப்டெம்பர் 1, 2013

          இன்று (செப்டெம்பர் 1, 2013), ‘அறிவிப்பூ’வில் ஓர் புதிய பகுதி ஆரம்பம் ஆகிறது – வரலாற்றில் அறிவியல், தொழில்நுட்ப நிகழ்வுகள், இதனால் சமூகத்தில் ஏற்பட்ட பாதிப்பு பற்றி தினமும் திறும்பி பார்க்கப்போகிறோம்.