இந்தியாவின் பண்டைக் காலத்து அறிவியல் கலாச்சாரம், பிற நாடுகளில் இருந்ததை விட எந்த விதத்திலும் குறைந்ததாக இல்லை என்ற உண்மை நம்முள் பலருக்கும் சென்றடையவில்லை என்று முன்பொரு கட்டுரையில் எழுதியிருந்தேன். இந்த உண்மையை அறிந்தவர்கள், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது இயற்கையே.
எனவே, இவ்வலைப்பூவில், இந்திய விஞ்ஞான வரலாற்றைப் பற்றி அவ்வப்போது நான் படித்ததையும், கேட்டதையும், சிறு கட்டுரைகளாக நான் எழுத முயன்றுள்ளேன். சமீபத்தில் இந்திய அறிவியல் பற்றிய புத்தகம் ஒன்று, கல்லூரி நூலகத்தில் பார்த்தேன். அதில், இந்திய கணிதவியல் கழகத்தின் திரு. ஸ்ரீதரன் அவர்கள் பழங்காலத்து இந்தியாவில் கணிதத்தின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டு பற்றி எழுதியுள்ளார். அதிலிருந்தும், இணையத்திலிரிந்து தோண்டி எடுத்த சில செய்திகளையும் தொடர்ந்து காண்போம்...
உலகின் மிக பழமையான நாகரிகங்களில் ஒன்று, சிந்து வெளி நாகரிகம் என்று பள்ளிகூடத்தில் வரலாறு பாடங்களில் நீங்கள் படித்திருக்கலாம். அந்த காலகட்டத்தில் அறிவியல் முறையற்றதாக இருந்தாலும், அப்பொழுது வாழ்ந்த மக்கள் சந்தித்த தேவைகளையும், பிரச்சனைகளையும் தீர்வு செய்யும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தது.
![]() |
| மோஹன்ஜதாரோ நன்றி:விக்கிபீடியா |
சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்களுக்கு என்ன ஆனது? என்ற கேள்விகளுக்கு இன்னும் நமக்கு பதில் கிடைக்கவில்லை. இருப்பினும், ஹரப்பா மற்றும் மோஹன்ஜதாரோ இடிபாடுகளிலிருந்து அவர்கள் நன்கு வடிவமைக்கப்பட்ட நகரப்புறங்களில் வாழ்ந்தனர் என்று தெரிய வருகிறது. நகர வடிவமைப்பின் திட்ட பணிகளுக்கு கணிதத்தின் முக்கிய அங்கமான வடிவவியல் (Geometry) அம்மக்கள் அறிந்திருக்க வேண்டும் என்று ஸ்ரீதர் அவர்கள் குறிப்பிடுகிறார். இதற்கு மேலும் ஆதாரம் அளிப்பதாக, அவர்கள் உருவாகிய மண்பாண்டங்களில், வட்டம் மற்றும் முக்கோண வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. நேரம், எடை மற்றும் நீளம் அளப்பதற்கு துல்லியமான அளவுகளையும் உபயோகித்தனர். உலகத்திலேயே மிகப் பழமையான அளவுகோலும் (Scale/Ruler) இங்கு கண்டுபிடிக்கப்பட்டது.
தொடரும்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக